விழுப்புரம்:நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அறிவித்த விஜய் அடுத்தடுத்து கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களில் களம் இறங்கினார்.முதற்கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.அடுத்ததாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்து அலுவலகத்தில் உள்ள 40 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார்.சிவப்பு, மஞ்சள் நிறத்தில் நடுவில் இரண்டு யானைகள், வாகைப் பூவுடன் வடிவமைக்கப்பட்ட கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து கட்சி மாநாடு பணிகளில் விஜய் தீவிரம் காட்ட தொடங்கினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற இருந்த மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதையொட்டி மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.தொடர்ந்து மாநாட்டுக்கு பாதுகாப்பு தரக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் புஸ்சி ஆனந்த் மனு அளித்தார்.இதையடுத்து விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/grzb