தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது.கேப்டன் வாழ்க… அரசு ஒழிக… என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர்.இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விளக்கேற்றி பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் விஜயகாந்த்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ‘ மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணை விட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.