சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும், புயல் நிவாரணத்திற்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:
பார்லிமென்டில் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம்.
பேரிடர் நிதியை மத்திய அரசு ஒதுக்காமல், தமிழக மக்களை வஞ்சிப்பதற்கு கண்டனம். .
தமிழக அரசு கோரிய ரூ.6,675 கோடி நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் .
ஜனநாயகத்துக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல் .
பெஞ்சல் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.
பெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு, தமிழகத்திற்கு போதுமான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற இன்றே புறப்படுவீர். தி.மு.க., அரசின் சாதனைகளை போர்ப் பரணி பாட வேண்டும் .
தமிழகத்தில் கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கண்டனம்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை பேரறிவுச் சிலையாக போற்ற வேண்டும்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதற்கு கண்டனம்.
கனிம சுரங்கச் சட்டத்தை ஆதரித்த அ.திமு.க.,வுக்கு கண்டனம். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும்.
இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.