ஊத்துக்கோட்டை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதன் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பூண்டி ஏரிக்கு மழை நீர்வர தொடங்கியதால் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 76 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அல்லது கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே இனிமேல் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/2g43