ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளரை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.1982-ம் ஆண்டுக்குப் பிறகு தோடா மாவட்டம் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.செனாப் பள்ளத்தாக்கான தோடா, கிஷ்த்வார் மற்றும் ராம்பன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 இடங்களுக்கு வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் என பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பிரதமர் மோடி கிஷ்த்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தோடா மாவட்ட மக்கள் பிரதமர் மோடியை நேரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணி அமைய இருக்கிறது.ஜம்மு-வில் பாஜக 43 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.ஜம்மு பகுதி பாஜகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக விளங்குகிறது. இந்த பிராந்தியத்தில்தான் கடந்து முறை 25 இடங்களில் வெற்றி பெற்றது.
The short URL of the present article is: https://reportertoday.in/k2vx