சென்னை,
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் ” என்று கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவு டெல்லி சென்றடைந்தார் .
இன்று காலை11 மணியளவில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.இந்த சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் டெல்லியில் இருந்து இன்று மாலை விமானத்தில் புறப்பட்டு இரவு சென்னை வந்து சேருகிறார்
The short URL of the present article is: https://reportertoday.in/ne2f