சென்னை:இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு மற்றும் 11 செயற்பாட்டு குழுக்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 131 முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங்களிலிருந்து 526 முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இம்மாநாட்டில் தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர் போன்றவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகளும், பணமுடிப்பும் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கென அமைக்கப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்யும். இம்மாநாட்டில் வெளிநாட்டை சேர்ந்த 39 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றார்கள். மேலும், மலேசியாவிலிருந்து 35 நபர்களும், ஜப்பானில் இருந்து 70 நபர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து 15 நபர்களும் குழுக்காக தங்களது சொந்த செலவில் மாநாட்டில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.பழனியில் நடைபெறும் மாநாட்டிற்காக 10,000 நபர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தலும், மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்களுக்காக 15 இடங்களில் உணவருந்தும் கூடங்களும், அறுபடை வீடுகளின் அரங்குகள், சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு 500 தங்கும் அறைகளும், கோவில் தங்கும் விடுதியில் 135 அறைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 1,200 காவல் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகின்றன.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகைதரும் முக்கிய பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் வகையில் துறையிலிருந்து செயல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நிலையிலான அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுவதோடு, மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. இம்மாநாட்டிற்காக ரூ.1.10 கோடி நன்கொடையாக வழங்கிட உபயதாரர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் ரூ.3 கோடியும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடியும் நிதி வழங்கப்படுகிறது.ஒன்றிய அரசுக்கு தோன்றுவதற்கு முன்பா கவே ராமேசுவரம் காசி ஆன்மிகப் பயணத்தை அறிவித்து இதுவரை 500 மூத்த குடிமக்களை அழைத்து சென்று செயல்படுத்திய ஆன்மிக அரசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு என்பதனை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்ஸ்ரீதர், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேசமங்கையர்க்கரசி, மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா. சுகுமார், திருமகள், ஹரிப்ரியா இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The short URL of the present article is: https://reportertoday.in/ymdh

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons