திருச்சி 800 மீ. பாலத்தில் இளையரின் சர்ச்சை செயலுக்குக் கண்டனம்*
திருச்சி: தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் சாலைத் தடுப்பில் இளையர் ஒருவர் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலானது.
போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, வழக்கமான பாதையைக் கைவிட்டு சாலைத் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டினார். குறிப்பிடும்படியாக, சாகசத்தில் ஈடுபட்ட அவர் தலைக்கவசமும் அணியவில்லை.
அவ்வழியாக வாகனங்களில் சென்ற சிலர், அந்த இளையரின் செயலைக் காணொளி எடுத்தனர். சமூக ஊடகங்களில் வலம் வந்த அக்காணொளியைக் கண்ட பலரும் அந்த இளையரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
அந்தப் பாலத்தின் நீளம் 800 மீட்டராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பாலம் முழுவதும் அவர் சாலைத் தடுப்பின் மீது வண்டியை ஓட்டியதாகச் சொல்லப்படுகிறது.
ஊடகத் தகவல்களின்படி, இச்சம்பவம் மே 23ஆம் தேதி நிகழ்ந்தது. உள்ளூரில் திருவிழா ஒன்றை முன்னிட்டு, அந்தப் பாலத்தில் ஊர்வலம் நடந்ததால் அங்கு வாகனமோட்டிகளின் பயன்பாட்டிற்குத் தற்காலிகமாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.