தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது
சென்னை: தமிழகத்தில் ஏறக்குறைய 5 லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியவில்லை என்பது அண்மைய கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டதாகவும் தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் விவரங்கள் சேரிக்கப்பட்டதாவும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழ் தெரியாத ஐந்து லட்சம் பேரில் பெரும்பாலானோருக்கு ‘அ, ஆ, இ, ஈ’ என்ற அடிப்படைத் தமிழ் எழுத்துகள்கூட தெரியவில்லை என்ற தகவல் தமிழ் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
முறைசாரா கல்வி இயக்குநரகம் சார்பில் தமிழகக் கிராமங்கள், நகரங்களில் எழுத்தறிவு பெறாதவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் எழுத்தறிவு பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஐந்து லட்சம் பேர் தமிழ் எழுத்துகளைக் கூட அறியாதவர்களாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
சென்னையில் மட்டும் 11,869 பேருக்கு தமிழ் எழுத்துகள் தெரியவில்லை. தமிழகத்திலேயே சேலம் மாவடத்தில்தான் ஆக அதிகமாக 40,191 பேருக்கு தமிழ் எழுத்துகள் தெரியவில்லை என்றும் அவர்களில் 29,176 பேர் பெண்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களையும் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக மாற்ற வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். இக் கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக முறைசாரா கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.