தஞ்சாவூா் பெரிய கோவிலில் 1039 ஆவது சதய விழா கோலாகலமாக தொடங்கியது!

தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மன்னராக முடிசூடினார். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1039 ஆம் ஆண்டு சதயவிழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், கருத்தரங்கம், இசை கஞ்சேரிகள் நடைபெறுகிறது. மாலை பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு துறை சேர்ந்த அறிஞர்களுக்கு இராஜராஜ சோழன் விருதினை வழங்குகிறார்கள்.

The short URL of the present article is: https://reportertoday.in/x4xl

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons