சென்னை:திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் புறப்படுகிறது.இதுகுறித்து இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படும் ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள்.தமிழக பக்தர்கள் சார்பாக, இந்த ஆண்டு, இந்து தர்மார்த்த சமிதி, திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்ய உள்ளது.அக்டோபர் 2-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடைகள் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதிகள் ராமானுஜ ஜீயர் 50-வது பட்டம் (வர்த்தமான சாமி) ஆசி வழங்கி தொடங்கி வைக்கிறார்.திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, அன்று மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர், யானைக்கவுனி பாலம், சூளை நெடுஞ்சாலை, ஏ.பி.ரோடு, வடமலையான் தெரு, தாணா தெரு, செல்லப்பா தெரு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது.அக்டோபர் 7-ந்தேதி திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
The short URL of the present article is: https://reportertoday.in/ddw4