சென்னை,

வருகிற 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், வருடந்தோறும் சென்னையில், பெருநகர காவல்துறையின் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வரும் அமைப்பினருடன் இன்று ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதன் விவரம்:-

* விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

* தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அனுமதி வாங்க வேண்டும்.

* விநாயகர் சிலைகளை பிற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே நிறுவுவதை தவிர்க்க வேண்டும்.

* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கம் மற்றும் கோஷங்கள் எழுப்ப கூடாது.

* சிலைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எந்தவித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்களுக்கு ஆதரவான பேனர்கள் வைக்க கூடாது.

* விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதிக்கும் நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே 4 சக்கர வாகனங்களில் எடுத்து சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

* சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை.

* சென்னை ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசின் உத்தரவுப்படி விதிகளை பின்பற்றி போலீசார் அனுமதிக்கும் நாட்களில் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துசென்று நீரில் கரைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

The short URL of the present article is: https://reportertoday.in/lc4c

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons