சென்னையில் ஓராண்டுக்குள் வான் போக்குவரத்து சேவை

 

சென்னை: அமெரிக்க விமான நிறுவனமான போயிங், சென்னையில் ‘வான் டாக்சி’ (ஏர் டாக்சி) சேவை தொடங்குவதற்கான பெருந்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசாங்கத்துடன் பங்காளித்துவத்தை ஆராய்ந்து வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அடுத்த ஓராண்டுக்குள் ‘ஏர் டாக்சி’ சேவையை கொண்டுவர தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்படுத்த உள்ளது. ‘வான் டாக்சி’ வசதியை முதலில் சென்னைக்கும், பின்னர் மற்ற பகுதிகளுக்கும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற வான் போக்குவரத்து (யுஏஎம்) திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக டிட்கோ கடந்த வாரம் நடத்திய கருத்தரங்கில், ஆளில்லா விமானம், குறுகிய தூரம் செல்லும் விமானங்களை இயக்கும் நிறுவனங்களை கொண்டு சென்னை பெருநகர பகுதிக்குள் பாதுகாப்பான வான் போக்குவரத்து வசதிகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்தின் ஆய்று, தொழில்நுட்ப பிரிவினர், வினாடா ஏரோமொபிலிடி நிறுவன பங்குதாரர்கள், சென்னை ஐஐடியின் ‘தி இபிளேன்’ நிறுவனம், சென்னை போக்குவரத்து காவல் துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA), விமான நிலைய ஆணையம், தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், மருத்துவ பணிகள் கழகம், சென்னை மாநகராட்சியின் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளின் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து, நகர்ப்புற வான் போக்குவரத்து திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முதல் நகரமாக சென்னையை உருவாக்க முடியும் என்று டிட்கோ திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறினார். அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து, சென்னை பெருநகர பகுதிக்கான பாதுகாப்பான, நகர்ப்புற வான் போக்குவரத்து திட்டத்தை உருவாக்க ஆய்வு மேற்கொள்ள ஒத்துழைப்பு தருவதாக போயிங் நிறுவனம் சார்பில் இந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, நகர் புற வான் போக்குவரத்து திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் அதற்கான வரைபடம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளைமேற்கொள்வது, தொடர்ந்து நகர்ப்புற வான் போக்குவரத்து திட்டத்தை படிப்படியாக செயல்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ‘‘நகர் புற வான் போக்குவரத்து திட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போதுதான் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக, சென்னைக்குள் அடுத்த ஓராண்டுக்குள் வான் டாக்சி சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அடுத்ததாக, மற்ற நகரங்களுடன் இந்த சேவையை இணைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று டிட்கோ அதிகாரிகள் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons