சென்னை: சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) நேரில் முன்னிலையாகினர்.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை அனுப்பியது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னிலையான ஆட்சியர்களிடம் அரசு மணல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவு எவ்வளவு, அதில் அவர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி, கைப்பற்றியுள்ள ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் கொண்டு வந்துள்ள ஆவணங்களை சரிபார்த்து அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது தொடர்பாக சில மாதங்கள் வழக்கு நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.