சென்னை : அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக்கு ஒத்துழைக்காத தலைவர்கள் வீடுகள் முன், முற்றுகை போராட்டம் நடத்துவது என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆகியோர் இணைந்து, ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இக்குழுவின் முதல் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது; புகழேந்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது; இணைப்புக்கு ஒத்துழைக்காத தலைவர்கள் வீடுகள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என, முடிவு எடுக்கப்பட்டது.
‘பழனிசாமிக்கு அடுத்ததாக உள்ள, இரண்டம் கட்ட தலைவர்கள், கட்சி தோல்வியை தொடர்ந்து வேடிக்கை பார்க்கக் கூடாது. பழனிசாமியிடம் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும். கோடநாடு கொலை வழக்கின் மர்மத்தை கண்டுபிடிக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
The short URL of the present article is: https://reportertoday.in/m4df