டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர்.இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். கீழே இறங்கி வர முயன்றபோது கற்கள் விழுந்ததால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர்.இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தகவலறிந்த தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம், இதுபற்றி கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அவர், உத்தரகாண்ட் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டார். இதுதொடர்பாக, கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என கவனித்தபின் அதற்கேற்ப அவர்கள் ஊர் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
The short URL of the present article is: https://reportertoday.in/ewvn