சென்னை: தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ தேர்வு நடக்கிறது. 2,327 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் இத் தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2,2ஏ பணியில் 1820 என 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 20ம் தேதி வெளியிட்டது. இப்பதவிக்கான முதல்நிலை எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இத்தேர்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 2763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர் தலைமையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 20 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். தாமதமாக வருவோர்க்கு மையத்தில் நுழைய அனுமதி இல்லை. தேர்வு எழுதுபவர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் வர வேண்டும். மின்னணு சாதனங்களான செல்போன், புத்தகம் குறிப்பேடுகள், கைப்பை மற்ற அனுமதிக்கப்படாத பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.
* சென்னையில் 75,000 பேர் பங்கேற்பு
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 93,967 பேர் எழுதுகின்றனர். இதில் ஆண்கள் 3 லட்சத்து 9,841 பேர், பெண்கள் 4 லட்சத்து 84,074 பேர், மூன்றாம் பாலினத்தவர் 51 பேர் அடங்குவர். சென்னையில் மட்டும் 75,185 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 251 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/9nhz