தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி (இன்று) அமெரிக்கா செல்கிறார். இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அதிகாரிகள் குழுவும் அமெரிக்கா செல்கிறது. இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண விவரம்:-

அமெரிக்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்வார். அமெரிக்காவுக்கு சென்றதும் அங்குள்ள தமிழர்களின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை (புதன்கிழமை) முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

அதோடு, 29-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ‘இன்வெஸ்டர் கான்கிளேவ்’ என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வரும்படி உலக பெரும் நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுப்பார்.

பின்னர் 31-ந் தேதி புலம் பெயர் தமிழர்களை சந்தித்து பேசுகிறார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ செல்கிறார். அங்கிருந்தபடி அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை அவர் நேரில் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கிறார்.

குறிப்பாக, சர்வதேச அளவில் சிறப்பாக இயங்கி வரும் பார்ச்சூன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுவார். அதன் மூலம் தமிழகத்துக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வருகிற 7-ந் தேதி சிகாகோவில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் மற்றும் அமெரிக்காவின் தமிழ்ச்சங்கங்கள் இணைந்து நடத்தும், ‘வணக்கம் அமெரிக்கா’ என்ற சிறப்பு நிகழ்ச்சியான மாபெரும் கலாசார விழா நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சி சிகாகோ ரிவர் ரோட்டில் உள்ள ரோஸ்மான்ட் அரங்கத்தில் நடைபெறுகிறது. தமிழகத்துக்கும், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும் இடையேயுள்ள உறவுகளை வெளிப்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

The short URL of the present article is: https://reportertoday.in/kfeh

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons