சென்னை:ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டு, அவை அந்தரத்தில் தொங்குகின்றன.இதனால் தமிழ்நாட்டில் இருந்து அந்த பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு ரெயில்கள் ரத்து மற்றும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்டிரல், கன்னியாகுமரி, நெல்லை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகள் வழியாக தமிழகம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று (4-ந்தேதி) மற்றும் 7-ந்தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தாம்பரத்தில் இருந்து சந்திரகாச்சி செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (22824), டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12622) ஆகிய ரெயில்கள் இன்று (4-ந்தேதி) ரத்து செய்யப்படுகின்றன.கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் (12666), நெல்லையில் இருந்து மேற்குவங்காள மாநிலம் புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் (22606) ஆகியவை வருகிற 7-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ், சென்டிரலில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், ராஜஸ்தான் மாநிலம் சாலிமாாில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரெயில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து கோவை வரும் ரெயில் என 4 ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ், டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூரில் இருந்து நெல்லை வரும் ரெயிலும், நிஜாமுதினில் இருந்து மதுரை வரும் ரெயிலும் நேற்று மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து ஜெய்பூா் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்தார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நேற்று மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/yl9u