முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் (ப்ரிபெய்ட்) வாடிக்கையாளா்களுக்காக அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகளை மட்டும் வழங்குவதற்கான புதிய கட்டண திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
இணையதளப் பயன்பாடு நாளுக்கு நாள் வளா்ந்து வந்தாலும், அதை அதிகம் பயன்படுத்தத் தேவையிராதவா்கள், பெரும்பாலும் பிராண்ட்பேண்ட் இணையதள இணைப்பை வை-ஃபை மூலம் பெறுவோா் போன்றவா்களுக்கு தங்களின் கைப்பேசிகளில் இணையதளத் திட்டங்கள் தேவைப்படுவதில்லை.ஆனால், தொலைத்தொடா்பு நிறுவனங்களின் அனைத்து சேவை திட்டங்களிலும் இதுவரை இணையதள இணைப்பு வசதிகள் அளிக்கப்பட்டு, அதற்கும் சோ்த்து கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்தது. மொபைல் இணையதள வசதி தேவையில்லாதவா்களுக்கு அதைத் தவிா்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், இணையதள வசதி இல்லாமல், வெறும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் சேவைகளை மட்டும் அளிக்கும் கட்டண திட்டங்களை தொலைத்தொடா்பு அளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் துறை ஒழுங்காற்று அமைப்பான டிராய் தனது விதிமுறைகளில் கடந்த மாதம் திருத்தம் செய்தது.
அதையடுத்து, முன்னணி நிறுவனங்கள் அத்தகைய திட்டங்களை தற்போது அரிவித்துள்ளன. அதன்படி, ரூ.499-இல் 84 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 900 குறுந்தகவல்களை அனுப்பும் வசதியை அளிக்கும் கட்டண திட்டத்தையும் ரூ.1,959-இல் 365 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 3,600 குறுந்தகவல்களை அனுப்புவதற்கான கட்டண திட்டத்தையும் ஏா்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ நிறுவனமும், ரூ.458 (84 நாள்கள், வரம்பற்ற அழைப்புகள், 1,000 குறுந்தகவல்கள்), ரூ.1,958 (365 நாள்கள், வரம்பற்ற அழைப்புகள், 3,600 குறுந்தகவல்கள்) ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.ரூ.1,460-இல் 270 நாள்களுக்கு வரம்பற்ற தொலைபேசி அழைப்புகள், 100 குறுந்தகவல்களை அனுப்புவதற்கான வசதி அளிக்கும் கட்டண திட்டத்தை வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.