சென்னை,
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
கடந்த 2-ம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இரு இடங்களிலும் பல்வேறு தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்காவாழ் தமிழர்களை சந்தித்தார். மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரத்து 965 வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை திரும்புவதற்காக கடந்த 12-ந் தேதி சிகாகோ விமான நிலையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவரை அங்குள்ள தமிழர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்துவிட்டு விமானம் ஏறினார். துபாய் வழியாக அவர் இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 8.25 மணிக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது
The short URL of the present article is: https://reportertoday.in/aajw