நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பெரிதாக பேசப்படவில்லை. வடிவேலு தன் நிலையை உணர்ந்தால் நல்லது.
நடிக்க வரும் போது நடிகனாக எந்த இலக்கணத்திலும் பொருந்தாத முகமும் உடலும் கொண்ட உருவம். அது தான் அப்போது வடிவேலு.
வடிவேலு வந்த புதிதில் காக்காய்க்கு பேண்ட் சட்டை மாட்டியது போலிருப்பார். அப்போது அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கும். அந்த உடல்வாகோடு அவர் ‘கோகுலம்’ படத்தில் பானுப்ரியாவோடு டூயட் பாடினார். அன்று தியேட்டரெல்லாம் சிரிப்பொலி, கரகோஷம்.
அதே வடிவேலு உடலெல்லாம் மினுமினுப்பாக படுஸ்டைலாக ஆனதும் விக்ரம், மாதவன் போன்ற நடிகர்களின் ஹீரோயின் சதாவோடு டூயட் பாடினார். பானுப்ரியாவோடு எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஆடிய போது ரசித்த மக்கள் சதா என்கிற அழகியோடு ராஜேஷ் கன்னாவின் மேரே சப்னோ கி ராணி பாடலில் நடித்த போது குழம்பி போனார்கள். இது சிரிப்புக்காட்சியா?..ஹீரோ ஹீரோயின் காதல் காட்சியா? படு குழப்பம்…எலி என்கிற அப்படம் படு தோல்வி.
வடிவேலுவின் இரண்டு பரிமாணங்கள். இதன் வித்தியாசத்தை வடிவேலு உணர்ந்திருந்தால் இந்த தோல்வி அவருக்கு நிழ்ந்திருக்காது. அன்று கோகுலம் படத்தில் வடிவேலு சிரிப்பு நடிகன். இன்று வடிவேலுவின் எலி ஹீரோயிஸத்தை யாரும் ரசிக்க முன்வரவில்லை.
நாயகனாக வடிவேலுவை தோல்வியுற செய்தது நல்லதே. இல்லையென்றால் தமிழனின் திரை ரசிப்புத்தன்மை மற்ற மாநிலத்தவரால் விமர்சிக்கப்பட்டிருக்கும்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன், முத்துராமன் என இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் நாகேஷின் போர்ஷன்களை நீக்கிவிட்டு யோசித்து பாருங்கள். அது வெற்றி பெற்றிருக்குமா என்றே தோன்றும்.
எல்லா நகைச்சுவை நடிகர்களும் சில விஷயங்களால் மறைந்து போவார்கள். சந்திரபாபு, சுருளி, நாகேஷ் போன்றோருக்கு குடிப்பழக்கம் சத்ருவாக இருந்தது. வடிவேலுவுக்கு தான் என்கிற ஆணவம் தான் அந்த குடிப்பழக்கம்.
தனக்காகத்தான் படம் ஓடுகிறது என்கிற நினைப்பு வரை சரி. ஆனால் அதன் ரியாக்ஷன்களை நடிகர்கள் காட்டத்தொடங்கும் போது தோல்வி தொடங்குகிறது.
வாயால் வென்றவர் கவுண்டமணி. வாயால் தோற்றவர் வடிவேலு.
வாய்ப்பு வாங்கிக்கொடுத்தது வாய் தான். ராஜ்கிரண் கவுண்டமணி வரமாட்டார் என நினைத்து ஷுட்டிங்குக்கு முதல் நாள் வடிவேலுவை வரவழைத்திருக்கிறார் மதுரையிலிருந்து. வடிவேலு நடிக்க மதுரையிலிருந்து வந்துவிட, கவுண்டமணியும் வந்து விட, ராஜ்கிரண் சரி…வந்துவிட்ட வடிவேலுவுக்கு ஒரு சீன் கொடுப்போம் என கொடுத்தது ஒரே ஒரு காட்சி. கவுண்டமணியை பார்த்து சௌக்கியமா என வடிவேலு கேட்க வேண்டும். கவுண்டமணி வடிவேலுவை உதைக்க தொடங்குவார். கேட்கமாட்டேண்ணே என்கிற டயலாகை வடிவேலு சொல்ல வேண்டும். ஆனால் வடிவேலு ‘அண்ணே படாத இடத்தில் பட்டுட போவுதுண்ணே..’ என தானாக பேசிய வாய் தான் இன்னும் சில காட்சிகளுக்கான வசனங்களை ராஜ்கிரணிடமிருந்து பெற்று தந்தது. மேலும் ராஜ்கிரண் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
வடிவேலு ‘கவுண்டர் மணி’யாக நினைத்ததன் விளைவே அவரின் இன்றைய தோல்வி.
வடிவேலு மனதளவில் பழைய ராசாவின் மனசிலே வடிவேலுவாக திரும்பி வந்தால் மட்டுமே சாதிக்கமுடியும்..
இல்லையென்றால் மீம் நாயகனாகவே மறைந்துவிட வேண்டியது தான்…
நாய்சேகர் ரிட்டன்ஸ் எங்களுக்குப்பிடிக்கும். நானும் ரௌடி தான்யா என்கிற அந்த அப்பாவி ‘வாலிப வயசு’ நாய் சேகரை.
வடிவேலு உங்களுக்கு காமெடி மட்டுமே வரும்.