இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது வீசியெறியப்படும் கண்ணீர்புகைக்குண்டுகளை சாலை பாதுகாப்பு கூம்புகளை வைத்து செயலிழக்க செய்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் உணவகம் ஒன்றிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்துச் சென்றனர். அரசியல்வாதிகள் 35-க்கும் மேற்பட்டோர் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனாவின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் குமார் வெல்காமா பயணம்செய்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாம்புலாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரா டென்னகூனில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜான்சன் பெர்னாண்டோ என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் பார் ஒன்றை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.

இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அலுவலகங்கள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரானேவின் வீடு, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்கா ஃபெர்ணாண்டோ உள்ளிட்டோரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கிபோராட்டம் நடத்துகின்றனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அதுவரை போராட்டம் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றுவந்த நிலையில், பிரதமர் பதவி விலகலுக்கு பிறகு வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons