முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது உட்பட பல அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து, ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

புதிய அமைச்சர்கள் செப்.29-ம் தேதி பதவியேற்றனர். இதுதவிர க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக அமைச்சரவையில் சேர்ந்துள்ள அமைச்சர்களில் கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதியவர்கள். எனவே, புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இன்று (அக்.8) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுவாக தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அனுமதிகள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். அந்த வகையில், முதலமைச்சர் பயணத்தின் அடிப்படையிலான அமெரிக்க முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதுதவிர, தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நிதிசார்ந்த திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான நிதி வருகை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இவைதவிர, தமிழ்நாட்டில் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில், தற்போதுள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில் இருந்து மேலும் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The short URL of the present article is: https://reportertoday.in/bcqz

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons