தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.

இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழகத்திற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும். சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை திமுக எம்.பி டி.ஆர்.பாலு, பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons