விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாணவிகளிடம், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருநதது.
இதற்காக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் 10.15 மணி வரை பேராசிரியை நிர்மலாதேவி வரவில்லை. இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக முடியாத நிலை இருப்பதாக அவரது வக்கீல் சார்பில் மனு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று வழங்கப்படுவதாக இருந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.