வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்ற் காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மாநகராட்சியின் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சுரங்கப்பாதைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பருவமழையையொட்டி 23,000 மாநகராட்சிப் பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“எவ்வளவு மழைபெய்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கூடுதலாக வார்டுக்கு 10 பேர் என 2 மாத காலத்துக்கு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்றார்.

இதற்கிடையே, குறைந்த காற்றழுத்தம் இனி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு நிலையம் அறிவித்து இருந்தது. அது புயல் சின்னமாக மாறுவதால் தமிழகத்தில் மேலும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த இரு நாள்களும் தமிழகக் கடற்பகுதி மற்றும் குமரி கடல் பகுதி, அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும் என அது அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. மழை தொடரும் என்பதால் சென்னை நகருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாயினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons