நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்தியாவின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்கலங்களை அனுப்பி, நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான் எனும் பெயரில் ஒரு திட்டம் குறித்து அறிவித்தார்.

இத்திட்டத்தை தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து ஊக்குவித்ததை தொடர்ந்து இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது.

இன்று மாலை 6-04 மணிக்கு நிலவின் தென் துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

இதனை தரை இறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 5-44 மணிக்கு தொடங்கினர்.

முன்னதாக லேண்டரை தரையிறக்குவதற்கான சிஸ்டம்களை அடிக்கடி சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சரியாக 5.44 மணிக்கு, விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி தொடங்கியது.

அப்போது விக்ரம் லேண்டர் மணிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. லேண்டரை தரையிறக்கும் போது, நிலவின் ஈர்ப்புவிசை மிக முக்கிய பங்கு வகித்ததால், அதற்கு ஏற்ற வகையில், லேண்டரின் வேகத்தை கட்டுத்தப்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இதுவரை நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன.

ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இது வரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons