இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்வதேச விலை நிலவரத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கான விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருவதால் முக்கியமான இந்த எரிபொருட்களின் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை ஏற்கனவே ரூ.100-ஐ கடந்து விட்டது.

அந்தவகையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106.66 ஆகவும், டீசல் விலை ரூ.102.55 ஆகவும் இருந்தது.

அதேநேரம் பெட்ரோல் விலை நாட்டின் பல பகுதிகளில் ரூ.120-ஐயும் கடந்து விட்டது. இதைப்போல டீசல் விலையும் பல இடங்களில் ரூ.110-ஐ எட்டும் நிலைக்கு சென்று உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு முக்கிய காரணமாகும்.
கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் சுமூக நிலைக்கு திரும்பி வரும் நிலையில், பெட்ரோல்-டீசலின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த தேவைக்கு ஏற்ப எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காததும் பெட்ரோல்-டீசல் விலையை உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது.

சர்வதேச நிலை இப்படி இருக்க, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் சிறப்பு வரிகளை விதித்து வருகின்றன. அந்தவகையில் மத்திய அரசு கலால் வரியும், மாநில அரசு வாட் வரியும் விதித்து இருக்கின்றன.

இந்த நடவடிக்கை ஏற்கனவே கொதி நிலையில் இருக்கும் பெட்ரோல்-டீசல் விலையில் மேலும் எண்ணெய் வார்ப்பது போல உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஜெட் வேகத்தில் விலையை எகிறச்செய்து வருகிறது.

இது வாகன ஓட்டிகளை வெகுவாக பாதித்து உள்ளது. அதேநேரம் இந்த விலை உயர்வு அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையிலும் பலமாக எதிரொலித்து வருகிறது.

இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இந்த விலை உயர்வை திரும்பப்பெறுமாறு மத்திய அரசை அனைத்து தரப்பினரும் கேட்டுக்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவ்வாறு பல்வேறு தரப்பில் இருந்தும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்து நேற்று நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதன்படி தீபாவளியையொட்டி பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-ம், டீசல் மீதான வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்து உள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த விலை குறைப்பின் அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் என கூறியுள்ள மத்திய அரசு, இதை பின்பற்றி மாநில அரசுகளும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விலை குறைப்பு மூலம் இந்த எரிபொருட்களின் நுகர்வு அதிகரித்து பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் எனவும், இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் என்றும் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நாட்டில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் தேவைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கையால், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல்-டீசல் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இது வாகன ஓட்டிகள் மட்டுமின்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்திருக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons