தமிழக முன்னாள் ஆளுநர்ரோசய்யா மறைவுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சனிக்கிழமை காலை காலமானார்.

ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 2009 ஆம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார்.2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தார். மேலும் கர்நாடக மாநிலத்தின் ஆளுநராகவும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

அவரது மறைவுக்கு ஆளுநர் கே.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது அறிக்கையில், ‘தமிழகமற்றும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர். கோனிஜெட்டி ரோசய்யாவின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

ரோசய்யா ஒரு மூத்த அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நிர்வாக நுணுக்கத்திற்காக அறியப்பட்டவர்.

ஆந்திரப் பிரதேசத்தில் நிதி அமைச்சராக முக்கியமான இலாகாவை வகித்தார் மற்றும் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆந்திரப் பிரதேசத்தில் நீண்ட காலம் பணியாற்றிய நிதியமைச்சராக அவர் ஆற்றிய பங்களிப்புகள் நன்கு அறியப்பட்டவை. ஆந்திரப் பிரதேச முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். அவர் ஒரு பணிவான மற்றும் பக்தியுள்ள நபராக இருந்தார். அவரது மறைவு நாட்டிற்கும் குறிப்பாக ஆந்திர மாநிலத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா, உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திர முதலமைச்சராக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர் – சட்டப்பேரவை உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர்.

அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பைப் பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.

ரோசய்யா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons