சென்னை ,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (03.10.2024) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் கடந்த மாதங்களில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலர்களில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்களை விவரித்தனர். அதில் பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல் (களப்பணி மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களை தவிர்த்து) ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தெரிவு செய்தல், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவிற்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள். தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், வருவாய் மற்றும் நிர்வாக சம்பந்தப்பட்ட கருத்துருக்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார். அமைச்சர் பதிவு செய்த ஆவணங்களை அன்றே திருப்பி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள் .
மேலும் உயர் அலுவவர்களால் விவாதிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களிடம் எடுத்து கூறி அவற்றினை செயல்பாட்டிற்க்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
பதிவுத்துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை ரூபாய் 1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் பிரவேந்திர நவ்நீத் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் , பதிவுத்துறை உயர் அலுவவர்கள் கலந்து கொண்டனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது
The short URL of the present article is: https://reportertoday.in/68v3