சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடிய பின்னரே, ஐயப்பனைத் தரிசிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் வரும் பக்தர்களுக்கு பம்பையில் குளிக்க அனுமதியில்லை என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்துக்கான மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய நாள் (15ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்று மாலையே சபரிமலை, மாளிகைபுரம் ஆகிய புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கிறார்கள்.

மறுநாள் முதல் புதிய மேல்சாந்திகள் தான் கோயில் நடையை திறப்பார்கள். 41 நாள் நீளும் மண்டல காலம் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையுடன் நிறைவடையும்.

அதைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் பம்பையில் நடந்தது. இதற்கு தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், சபரிமலையில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகளுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 15.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும். ஆன் லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலைக்கு இந்த வருடமும் பெரிய பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த 2 வருடங்களாக இந்த பாதையில் பக்தர்கள் செல்லாததால் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். மண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி யில்லை. இந்த வருடமும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. பக்தர்கள் நெய் அபிஷேகம் நடத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை வரும் பக்தர்கள், ஊழியர்கள், போலீசார் உள்பட அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்குள் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் எடுத்திருக்க வேண்டும். கொரோனா வந்து குணமாகி 3 மாதம் ஆகாதவர்கள் சபரிமலை பயணத்தை தவிர்க்க வேண்டும்.

பம்பை முதல் சன்னிதானம் வரை முக்கிய இடங்களில் இதய சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தபடும். சன்னிதானத்தில் அவசர அறுவை சிகிச்சை மையம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons