கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்-75ன் கீழ் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை இணைக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கப்பல்கள் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையுடன் இணைத்து இயக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நான்காவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வேலா, மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது. பின், இந்த நீர்மூழ்கிக் கப்பலை கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கினார்.
மத்திய அரசுக்கு சொந்தமான மசகான் டாக் என்கிற கப்பல் தயாரிப்பு நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பலை கட்டமைத்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் இணைத்ததன் மூலம், இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்ந்துள்ளது.
இதுகுறித்து கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் கூறியதாவது:-
ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் முழு அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. இன்றைய சிக்கலான பாதுகாப்பு சூழ்நிலையில், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், கடற்படையின் திறனை மேம்படுத்துவதிலும் இது பங்கு வகிக்கும்.
பி-75ன் திட்டம் இந்தியா-பிரான்ஸ் இடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இந்த நீடித்த கூட்டாண்மை புதிய உச்சத்தை அடைந்துள்ளதை குறிக்கிறது. திட்டம் 75-ன் பாதியை நாம் கடந்துவிட்டோம்.
கடற்படைப் பணியாளர்களின் தலைவராக இருந்தபோது, கொரோனா காலம் சவாலாகவும், பதற்றமும் இருந்தது. கப்பல்களில் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை, ஆனால் நாங்கள் அனைத்தையும் சமாளித்தோம்.
சமீபத்தில் ஐஎன்எஸ் விக்ராந்தின் கடல் சோதனையை வெற்றிகரமாக நடத்தினோம். ஆகஸ்ட் 2022க்குள் ஐஎன்எஸ் விக்ராந்தை இயக்க முடியும்.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் சமீபத்தில் கொள்முதல் செய்திருப்பது இயக்கவியலை மாற்றக்கூடும், எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்