தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும் அவர் சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பேச முடியாமல் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த்தால் நிற்கவும் முடியாது. இதனால் எங்கும் செல்லாமல் விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி விஜயகாந்த்தின் உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. மூச்சுவிட முடியாமல் அவர் திணறினார்.

இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் விஜயகாந்தை சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

அதிக அளவில் சளி தேங்கிய காரணத்தினாலேயே விஜயகாந்த் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அது தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு விஜயகாந்த்துக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் இயல்பு நிலையில் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதனால் விஜயகாந்த் சில நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த்துக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை தேவைப்படுவதாகவும், எனவே 14 நாட்கள் வரையில் அவர் சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் மூலமாக கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சு விடுவதில் அவருக்கு தொடர்ச்சியாக சிரமங்கள் இருந்து வருகின்றன.

நுரையீரலில் சளி பாதிப்பால் ஏற்பட்ட தொற்றில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்தால் அதில் இருந்து வேகமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

சென்னையில் பெய்து வரும் மழை மற்றும் குளிர்ச்சியான சூழல் ஆகியவையும் அதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் விஜயகாந்தின் உடல் நிலையில் நேற்று முன்தினம் பின்னடைவு ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு அவர் திணறினார்.

இதையடுத்து மார்பு பகுதியில் இருக்கும் சளியை அகற்றுவதற்கு விஜயகாந்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இன்னும் 2 வாரங்களுக்கு மேல் விஜயகாந்துக்கு ஆஸ்பத்திரியிலேயே தொடர் சிகிச்சை அளித்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

மார்பில் தேங்கியுள்ள சளியை முழுமையாக அகற்றுவதற்கு விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே வீடடுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons