சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை சார்பில் அனுமதி அளித்து ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த விமான நிலையம் அமைப்பதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர் மற்றும் அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விமான நிலையம் அமைந்தால் குடியிருப்புகள், விளை நிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்று கூறி ஏகனாபுரம் கிராம மக்கள் இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் போராட்டக்காரர்கள் இடையே தொடர் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
The short URL of the present article is: https://reportertoday.in/e1g5