சேலம்,

சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்த உயிரிழந்துள்ளார். பள்ளம் தோண்டப்பட்ட பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது. ஆகவே அரசு இனி மழை நீர் வடிகால் கால்வாய் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். அதோடு அந்த சாலை அதிகமான மாணவர்கள், குழந்தைகள் செல்லும் பாதையாக இருக்கின்றது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அலட்சியமாக இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மிக மிக மெத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த துறையினுடைய அமைச்சர், சென்னையின் மேயர், முதல்-அமைச்சர் எல்லோரும் செய்தியாளர்களிடம் பேசும்போது மழைநீர் வடிகால் பணி சுமார் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக சொன்னார்கள். இன்று வரை அந்த பணி நிறைவு பெறவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு பின்பு வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இனியாவது இந்த அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து கொண்டு வேகமாக துரிதமாக மழைநீர் வடிகால் பணியை நிறைவேற்ற வேண்டும்.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு பல்வேறு நிபந்தனைகள் கொடுத்து ஜாமீன் வழங்கி இருக்கிறது. செந்தில்பாலாஜி ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வருகின்ற பொழுது முதல்-அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘வருக வருக என வரவேற்கிறேன்; உன் தியாகம் பெரிது; உறுதி அதனினும் பெரிது’ என்று குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். செந்தில் பாலாஜியும் முதல்-அமைச்சரின் பரிந்துரையின் படி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளின் பேரில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் தந்துள்ளது. நிபந்தனைகளை செந்தில் பாலாஜி மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் மக்களிடத்தில் உள்ளது. முதல்-அமைச்சரே செந்தில்பாலாஜியை பாராட்டி இருக்கின்றார். செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டார். இப்படி இருக்கின்ற பொழுது அவர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறுகின்ற பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது ஐயப்பாடாக இருக்கிறது. அதோடு செந்தில் பாலாஜியின் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஓராண்டுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. பல நாட்களாக உதயநிதி துணை முதல்-அமைச்சர் ஆவார் என்று அடிக்கடி ஊடகங்களில் வந்தது. இந்நிலையில் உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. உதயநிதி தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும். திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி தரப்படவில்லை. வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

The short URL of the present article is: https://reportertoday.in/hkl2

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons