சென்னை:நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில், 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். பல துறைகளில் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.இதன்படி ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பித்து வருகின்றனர்.இதுவரை நாடு முழுவதும் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர் என்றும், 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் ஆதார் எண்ணை புதுப்பிக்கவில்லை என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.செப்டம்பர் 14-ந் தேதி வரை கட்டணமின்றி ஆதாரை புதுப்பிக்க ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அதற்குள் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு பின்பு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தான் ஆதாரை புதுப்பிக்க முடியும் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆதார் சேவை மைய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘ஆதார் சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆதாரை புதுப்பிக்கும்போது கருவிழி, விரல்ரேகை போன்றவற்றையும் சேர்த்து புதுப்பிக்கப்படும். தற்போது வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகள் விரல்ரேகை மற்றும் கருவிழி மூலமே ஆதார் உறுதி செய்யப்படுகிறது.திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தரிசன டிக்கெட்டுகள் கருவிழி மூலம் ஆதாரை உறுதி செய்து தான் வழங்கப்படுகிறது. விரல் ரேகை, கருவிழியை புதுப்பித்து கொள்வதன் மூலம் தேவையான இடங்களில் ஆதார் அட்டையை உறுதி செய்வதற்கான தடைகள் எதுவும் இருக்காது. ஆதாரை புதுப்பிக்காதபட்சத்தில் கைரேகை, கருவிழி போன்றவை ‘மேட்ச்’ ஆவதற்கு சிரமப்படும்’ என்றார்.
The short URL of the present article is: https://reportertoday.in/e0uz