தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று அவர் தஞ்சையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்து 8 மாதம் தான் ஆகிறது. அதற்குள் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டது. இதேபோல் நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்றதை தான் செய்வார், செய்வதை தான் சொல்லுவார்.

ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் 3-வது அலை வந்த போது ஆரம்பத்திலேயே துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் இதுவரை 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 1 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டது. இதிலிருந்தே அவர்கள் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

இந்திய அளவில் நடந்த சர்வேயில் சிறந்த நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த முதலமைச்சராக செயல்படுகிறார்.

டெல்லியில் ராகுல் காந்தி பேசும்போது, தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்று கூறியுள்ளார். இப்படி அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக தி.மு.க. விளங்குகிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னையே தேடிக் கொண்டிருக்கிறார். என்மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார். நான் எங்கேயும் செல்லவில்லை. தினமும் தேர்தல் பிரசாரத்தில் தான் ஈடுபட்டு வருகிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் ஆகிய நீங்கள் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தயாராகி விட்டீர்கள். வேட்பாளர்கள் தி.மு.க.வின் சாதனைகளை கூறி வாக்கு சேகரியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons