நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 5 கோவில்களில் நடந்து வருகிறது. இந்த திட்டமானது, தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

10 கோவில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்கப்படும். மேலும், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி முக்கிய திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

நவீன வசதிகளுடன் கோசாலை

கோவில்களுக்கு தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளை பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் கோயில்பதாகை சுந்தரராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும். இதற்கென ரூ.20 கோடி செலவிடப்படும்.

கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவீதம் அர்ச்சகருக்கு பங்குத்தொகையாக வழங்கப்படும்.

500 இணைகளுக்கு திருமணங்கள்

கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றியும், கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் இன்றி திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் கோவில் சார்பாக வழங்கப்படும்.

ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டு தோறும் 500 இணைகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை கோவில்களே ஏற்கும். மாதந்தோறும் பவுர்ணமி தினங்களில் 12 பிரசித்திப்பெற்ற அம்மன் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படும். இதற்கான செலவில் நான்கில் ஒரு பங்கு மட்டும் பக்தர்களிடம் கட்டணமாக பெறப்படும்.

2 ஆயிரம் கோவில்களுக்கு விரிவாக்கம்

ஒரு கால பூஜைத்திட்டத்தின்கீழ் நிதி வசதியற்ற 12 ஆயிரத்து 959 கோவில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதியற்ற மேலும் 2 ஆயிரம் கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.40 கோடி அரசு மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் சேர்க்கப்படும் 2 ஆயிரம் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சார்பாக மகா சிவராத்திரி விழா கடந்த ஆண்டு வெகுசிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றது. அதனைத்தொடர்ந்து இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் 5 சிவாலயங்கள் சார்பாக மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்.

அவ்வையாருக்கு மணி மண்டபம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினம் கிராமம் அவ்வையார் விஸ்வநாதசாமி கோவிலில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் அமைத்து, அவரது பாடல்கள் கல்வெட்டாக பதிக்கப்படும்.

தற்போது, அவ்வையாருக்கு பங்குனி மாதம் சதய நட்சத்திரத்தன்று 2 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு முதல் இவ்விழா 3 நாட்களுக்கு வெகுசிறப்பாக நடத்தப்படும். பெரிய புராணம் கண்ட சேக்கிழார் பிறந்த தலமான குன்றத்தூரில் அன்னாரின் திருநட்சத்திரத்தையொட்டி ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு நாள் மட்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், 3 நாட்களுக்கு அரசு விழாவாக வெகு சிறப்பாக நடத்தப்படும்.

அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள்

கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கோவில்களின் தல வரலாறு, தலபுராணம், கோவில்களின் சிறப்பு அம்சங்கள், திருவிழா நிகழ்வுகள், கோவில் அருகாமையில் உள்ள மற்ற கோவில்களின் வழித்தடங்கள் பக்தர்கள் அறியும் வகையில் பெரிய திரையில் சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் திரையிடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தி இதர 47 முதுநிலை கோவில்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில் உட்பட 19 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள், கோவில் அலுவலக கட்டிடங்கள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

திருத்தணி கோவிலுக்கு வெள்ளித்தேர்

சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் பணியாளர்கள் குடியிருப்புகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைக்கப்படும். திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளிதேர் உருவாக்கப்படும்.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் ரூ.6 கோடி செலவில் உருவாக்கப்படும். நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேய சாமி கோவிலுக்கு புதிய தங்கத்தேர் ரூ.6 கோடி செலவில் உருவாக்கப்படும்.

1,000 கோவில்களில் திருப்பணி

1,000 கோவில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் மேற்கு ராஜகோபுரம் புதுப்பித்தல், சன்னதிகள் பழுது பார்த்து புதுப்பித்தல், ஆயிரங்கால் மண்டபம் மேல்தளம் மற்றும் தரைத்தளம் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சென்னை, தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருப்பணிகள்

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலின் உபகோவிலான பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தின சபையாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை, வில்லிவாக்கம் தேவிபாலியம்மன் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை, அயனாவரம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். காஞ்சீபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரம், காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசாமி கோவிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

கலாசார மையம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், எருமை வெட்டிபாளையம், வரமுக்தீஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். எழும்பூர் சீனிவாசப்பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி ஆளவந்தார் திருவரசு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாசார மையம் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படும். அம்மையத்தில் ஆன்மிக நூலகமும் அமைக்கப்படும். மேலும், மீட்கப்பட்ட தெய்வத்திருமேனிகள் அம்மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons